வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

காஞ்சிபுரம், ஏப்.2: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து தற்காப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு, கலெக்டர் சினேகா பல்வேறு அறிவுரை வழங்கியுள்ளார்.
உலக வெப்பமயமாதலின் காரணமாக புவியின் வெப்பமானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலும் கோடை வெயிலின் தாக்கம் வெப்ப அலையாக தற்போது உருவெடுத்துள்ளது. வெயிலின் தாக்கத்திற்கான தற்காப்பு வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் தளர்வான வெளிர் நிற பருத்தி போன்ற வியர்வையை உறிஞ்சக்கூடிய வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்லும்போது பாதுகாப்பாக வெளிர் நிறத்திலான குடை, தொப்பி, குளிர் கண்ணாடிகள் மற்றும் காலணிகள் போன்றவை பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும்பொழுது குடிப்பதற்கு தேவையான நீரை எடுத்துச்செல்வது நல்லது. தாகம் இல்லாவிடினும்கூட அவ்வப்போது தண்ணீரை முடிந்தவரை உட்கொள்வது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கும். இது ஏசி அறையிலேயே வாழ்பவர்களுக்கும் பொருந்தும்.

இது, உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்கவைக்க உதவியாக அமையும். உடலில் நீரிழப்பு ஏற்பட காரணமான ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது தவிர நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், தர்பூசணி போன்ற பழங்களை உட்கொள்வது பயன் தரும். அதிக புரதச்சத்து உணவுகள் மற்றும் காலாவதியான உணவுகளை தவிர்க்கவும். நேரடியாக வெயிலில் பணியாற்றுபவர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், தொழிலகங்கள், கட்டிட தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், காவல் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை போன்றவற்றில் பணியாற்றுபவர்கள் மிகமிக கவனத்துடன் இருக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், நாள்பட்ட நோய்வாய்ப் பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் தேவையின்றி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். மதிய வேளையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை அனுமதிக்க வேண்டாம். வெயிலில் மயக்கம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவிகளை அருகிலுள்ளவர்கள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு விசிறி விட வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம், விழிப்புணர்வுடன் உட்காரும் நிலையில் இருந்தால் குளிர்ந்த குடிநீரை பருக கொடுக்கலாம், முழு மயக்கத்தில் இருப்பவர்களுக்கு வாய் வழியாக நீரையோ வேறு எதனையும் தரக் கூடாது.

மேலும், அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்சை தொடர்பு கொள்ளவும். வெப்ப அலை தாக்கத்தில் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப அலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு தயார் நிலையில் போதுமான படுக்கைகள், ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் இதர மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Related Stories: