காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 29: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் 22ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து, மாலையில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவையொட்டி தினம்தோறும் சூர்ய பிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், பவழக்கால் சப்பரம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை,  கைலாச பீட ராவண வாகனம், 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் ஊரவலம், வெள்ளித்தேர் என பல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் காலை, மாலை இருவேளையும் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் (மகாரதம்) எனப்படும் தேரோட்டம் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 72 அடி உயரமும், 5 நிலை கொண்டு 150 டன் எடை கொண்ட இந்த ரத உற்சவ விழாவையொட்டி, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர். சிவபெருமானை தரிசிக்க அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நமச்சிவாய கோஷம் விண்ணை எட்டுமளவுக்கு முழக்கமிட்டவாறு ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜவீதிகளிலும் தேர் வலம் வந்தது.

தேரோட்ட விழாவையொட்டி அன்னதானம், மோர், இலவச குடிநீர் விநியோகம் என பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 1ம் தேதி காலை நடைபெற உள்ளது. அப்போது, தங்க இடப வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி அருள்பாளிக்கிறார். தேரோட்டம் 4 ராஜ வீதிகளில் சாலைக்கு நடுவே இருந்த தடுப்பு கட்டைகள், தேர் வருவதற்கு வசதியாக அகற்றப்பட்டன. தேர் வரும் நேரத்தில் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. விழாவில், 100க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Related Stories: