மாமல்லபுரம் அருகே ‘100 சதவீத வாக்களிப்பு’ வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு

மாமல்லபுரம், மார்ச் 25: மாமல்லபுரம் அருகே, கல்லூரி மாணவர்கள் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாவட்ட கலெக்டர் பங்கேற்றார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் பறக்கும் படை சார்பில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் “வாக்களிப்பது உங்கள் பொறுப்பும், உரிமையும் ஆகும்” என்ற தலைப்பில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஓட்டு மற்றும் 100 சதவீதம் வடிவில் நின்று, 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா, திருப்போரூர் தாசில்தார் ஆறுமுகம், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிபிரசாத் ராவ், பையனூர் வருவாய் ஆய்வாளர் சங்கிலி பூதத்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: