காஸ் விலை உயர்வு, தட்டுப்பாட்டை சமாளிக்க புகையில்லா சமையலுக்கு ராக்கெட் அடுப்புகள்

வாலாஜாபாத், மார்ச் 29:வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மகளிர் சபைக் கூட்டத்தில், போர் மற்றும் பேரிடர் போன்ற அசாதாரண சூழல்களை எதிர்கொள்வது குறித்து மகளிர் சபையில் ஆலோசிக்கப்பட்டது. எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ அல்லது மின்சாரம் இல்லாத சூழல் உருவானாலோ சமையல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள ‘ராக்கெட் விறகடுப்பு’ முறையைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. எதிர்காலப் போர்கள், பொருளாதாரத் தடைகள் அல்லது இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராம மக்கள் ‘தற்சார்பு’ கொள்கையை கையில் எடுத்துள்ளனர். இதில், குறிப்பாக, அந்த கிராம மகளிர் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் மற்றும் செயல்பாடுகள் தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமைந்துள்ளன.
இந்த புதிய முயற்சியின் கீழ், மகளிர் குழு நிர்வாகிகள் ராக்கெட் அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து அவர்கள் கூறுகையில், சாதாரண விறகடுப்புகளை விடவும், ஏன் எல்.பி.ஜி காஸ் சிலிண்டர் அடுப்புகளை விடவும் மிக வேகமாக இதில் சமைக்க முடிகிறது.

மிகக் குறைந்த அளவிலான விறகு குச்சிகளை வைத்தே அதிக வெப்ப ஆற்றலை உருவாக்க முடியும். அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதில் புகை மிகக் குறைவாகவே வரும். இது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பானது. சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என கூறுகின்றனர். மேலும், பேரிடர் காலங்களில் உணவு மற்றும் எரிசக்திக்கு பிறரைச் சார்ந்திருக்கக் கூடாது என்ற நோக்கில், தேவரியம்பாக்கம் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் எடுத்துள்ள இந்த தற்சார்பு நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன் யோசனையுடன் செயல்பட்டால் எந்த நெருக்கடியையும் சமாளிக்கலாம் என்பதற்கு இக்கிராம மகளிர் குழுவினர் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர். இயற்கையோடு இணைந்த வாழ்வியலை நோக்கித் திரும்பியுள்ள தேவரியம்பாக்கம் பெண்களின் இந்த முயற்சி, அண்டை கிராம மக்களையும் ஈர்த்துள்ளது.

Related Stories: