காஞ்சிபுரம், மார்ச் 27: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 107 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6,667 மாணவர்களும், 7,440 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 133 மாணவர்களும், 152 மாணவிகளும் என மொத்தம் 14,392 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, 12ம் வகுப்பு வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 57 தேர்வு மையங்களில் 6744 மாணவர்களும், 7540 மாணவிகளும் என மொத்தம் 14,284 பேர், பிளஸ்2 அரசு பொதுத்தேர்வினை எழுதினார்கள்.
14 பேர் தேர்வு எழுத விலக்கு பெற்றிருந்த நிலையில், 45 மாணவர்களும், 49 மாணவிகளும் என மொத்தம் 94 பேர் பல்வேறு காரணங்களுக்காக தேர்வினை எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 57 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 80 பறக்கும் படை அதிகாரிகள் குழுவினரும் சோதனையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் உள்ள பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட கலெக்டர் சினேகா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி உடனிருந்தார். இதனையடுத்து, 12ம் வகுப்பு மாணவ – மாணவிகள், தேர்வு முடிந்து விட்டது என்ற சந்தோஷத்தில் இங்க் மற்றும் வண்ண பவுடர்களை பள்ளி நண்பர்களுடன் துள்ளி குதித்து பூசி மகிழ்ந்தனர்.
