குத்தகைக்கு எடுத்து திருப்பி கொடுக்காமல் 81 வயது முதியவரின் நிலத்தை அபகரித்த மாஜி அதிமுக அமைச்சர் குடும்பத்தினர்

செங்கல்பட்டு, மார்ச் 27: மதுராந்தகம் அருகே குத்தகைக்கு எடுத்த நிலத்தை திருப்பி கேட்டபோது, மாஜி அதிமுக அமைச்சரின் மனைவி, மகன், பேரன் ஆகியோர் 81 வயது முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சொத்து பத்திரத்தை திரும்ப பெற்றுத் தரக்கோரி எஸ்பியிடம் பாதிக்கப்பட்ட முதியவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு (81). இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அதிமுக அமைச்சர் ராமகிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். ராமகிருஷ்ணனின் மகன் திருவேழுமலை மற்றும் அமைச்சரின் பேரன் திருமுருகன் ஆகியோர் சாமிக்கண்ணுவின் நிலத்தை பராமரித்து விவசாயம் செய்து வந்தனர். குறிப்பாக அந்த நிலத்தில் இரண்டு முறை சவுக்கு மரங்களை பயிர் செய்து அதன் மூலம் சுமார் ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்டியதாக சாமிக்கண்ணு மற்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

குத்தகை காலம் முடிந்த பின்னர் பணத்தை திருப்பி கொடுத்து, நிலத்தை கேட்டால் எங்களுக்கு பணம் தேவையில்லை, அந்த நிலம்தான் வேண்டும், அந்த நிலத்தை எங்களுக்கு எழுதி கொடுத்துவிடு என முதியவரிடம் திருப்பி ஒப்படைக்காமல், அவரது 6 ஏக்கர் நிலத்தையும் முழுமையாக அபகரிக்கும் நோக்கில் திருவேழுமலை தரப்பினர் நீண்டகாலமாக சாமிக்கண்ணு குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கடந்த 2022 மற்றும் 2026ம் ஆண்டு மதுராந்தகம் காவல் நிலையத்தில் சாமிக்கண்ணு புகார் அளித்தார். இருப்பினும், அந்த புகார்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காவல்துறை இழுத்தடித்து வருவதாக சாமிக்கண்ணு தரப்பில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், 81 வயது முதியவரான சாமிக்கண்ணு தனது மகன்களுடன் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று நேரில் சென்று புகார் அளித்தார், அதில் அவர் கூறியிருந்ததாவது: முன்னாள் அமைச்சரின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் திருவேழுமலை, பேரன் திருமுருகன் மற்றும் அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்றுமுன்தினம் ஆயுதங்களுடன் என் வீட்டிற்குள் புகுந்து, முதியவர் என்றும் பாராமல் என் சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து கீழே தள்ளி அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

அந்த விவசாய நிலத்தை எங்களுக்கு தரவில்லை என்றால் உன் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என மிரட்டி என்னிடம் வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்க முயன்றனர். அப்போது, என் வீட்டில் பிரச்னை என்று தெரிந்ததும் அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. தற்போது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிப்பதோடு ராமகிருஷ்ணன் குடும்பத்தினரிடம் நான் பெற்றுக்கொண்ட ரூ.5 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்து எனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்திற்கான சொத்து பத்திரத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும். நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு சாமிக்கண்ணு கூறியிருந்தார்.

Related Stories: