ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்: டிரம்ப் வீடியோ வெளியீடு..!

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று(31-03-2026) அதிகாலை நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பு குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளார். டிரம்ப் அந்தக் காணொளி குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஆனால் 23 லட்சம் மக்கள்தொகை கொண்டதும், பத்ர் இராணுவ விமானப்படைத் தளம் அமைந்துள்ளதுமான ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள ஒரு முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்கள்தான் அது என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

இது குறித்து அமெரிக்க அதிகாரி தெரிவித்தாவது; அமெரிக்கப் படைகள் இஸ்பஹானில் உள்ள வெடிமருந்துக் கிடங்கின் மீது சுமார் 907 கிலோகிராம் எடையுள்ள பங்கர் பஸ்டர்ஸ் (பதுங்குகுழி தகர்ப்பு) குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்கின. இந்தத் தாக்குதல், வானுயர்ந்த நெருப்புப் பந்துகளையும் அப்பகுதி முழுவதும் அதிர்வலைகளையும் பரப்பியது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தும் போர் இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில், பாகிஸ்தான், எகிப்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் போரைத் தணிப்பதற்காக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 540 கிலோகிராம் என மதிப்பிடப்பட்ட, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஈரான், இஸ்பஹானில் உள்ள ஒரு நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள தளத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.இதன் காரணமாகவே இஸ்பஹான் நகரில் அமெரிக்க தாக்குதல் நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: