கால்ப்லிங்ஸ் சாலையின் உயர தடுப்பு சேதம்

 

ஊட்டி, மார்ச் 29: ஊட்டி-கூடலூர் மாற்றுப்பாதையில் (கால்ப்லிங்ஸ் சாலை) கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட உயர தடுப்பு சேதமடைந்துள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் பிரதான சாலையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து எச்பிஎப் பகுதிக்கு செல்ல இரு சாலைகள் உள்ளன. பிரதான சாலையில் தற்போது எச்பிஎப் அருகே நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. எனவே, இச்சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சாலையில், வேகமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், பெரும்பாலானவர்கள் மாற்றுப்பாதையான கால்ப் லிங்ஸ் சாலையை பயன்படுத்த துவங்கினர். குறிப்பாக, டிப்பர் லாரிகள் உட்பட கனரக வாகனங்களும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் உள்ளூர் வாகனங்களும் இதனை பயன்படுத்த துவங்கினர். இச்சாலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லும் நுழைவு வாயில் உள்ளது. மேலும், தனியார் மகளிர் கல்லூரியும் உள்ளது. இதனால், இச்சாலையில், விபத்து அபாயம் நீடித்தது.

அதுமட்டுமின்றி காலை நேரங்களில் பலரும் இச்சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் நிலையில், அவர்களுக்கும் விபத்து அபாயம் நீடித்தது.  கால்ப் லிங்ஸ் சாலையிலும் வேகத் தடைகள் அமைக்கப்பட்டது. டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் விதமாக கூடுதல் ஆட்சியர் அலுவலகம் அருகே உயர் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உயர தடுப்பில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன் இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Stories: