பாலக்காடு, மார்ச் 25: பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே நன்னியோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன பரிசோதனையின் போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் கேரளம்-தமிழ்நாடு எல்லையில் மீனாட்சிபுரம் அருகே நன்னியோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீனாட்சிபுரத்திலிருந்து பாலக்காடு நோக்கி ஒரு கார் வந்தது. அப்போது உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல் காரில் இருந்தவர்களிடம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி மா.கம்யூ. பிரமுகர்கள் காரில் பணம் கடத்தி வந்ததாக தெரியவந்தது. உரிய ஆவணங்கள் காண்பித்து பணம் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவர்கள் அறிவித்தனர். பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் அதிகாரிகளிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
