ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

 

ஊட்டி, மார்ச் 29: ஊட்டி அருகே கடநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக உள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதேபோல் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்க கூடிய ஊட்டி நகரத்தை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளன. இந்த வனங்களில் இருந்து வெளியேறும் காட்டு மாடு, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நகருக்குள்ளும், புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கை. தொடர்ந்து வனத்துறையினர் அவற்றை வனத்திற்குள் விரட்டுவார்கள்.

இரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர கூடிய சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளான நாய், கோழி உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்வதும் வழக்கமாகியுள்ளது. மான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை காட்டிலும், நாய் போன்றவற்றை வேட்டையாடுவது சுலபம் என்பதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனிடையே சமீபகாலமாக மாவட்டம் முழுவதும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றன.

இந்நிலையில் ஊட்டி அருகேயுள்ள கடநாடு, மாவுகல் ஹட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு அருகே சிறுத்தை உலா வந்தது. இரவு நேரத்தில் குடியிருப்பு ஒட்டி சிறுத்தை சுற்றித்திரிந்ததால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

 

Related Stories: