கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர்ரக போதைப்பொருள் விற்ற பெண், வாலிபர் கைது

பாலக்காடு, மார்ச் 20: கோதமங்கலம் பஸ் நிலையம் அருகே உயர் ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளம்பெண்ணும், வாலிபரும் கைது செய்யப்பட்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகளவில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கலால் துறை அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் எர்ணாகுளம் அடுத்த கோதமங்கலம் பஸ் நிலையம் அருகே ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் சந்தேகப்படும்படியாக நின்றனர்.

அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணும், வாலிபரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போதைப்பொருள் கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக பெங்களூரூவிலிருந்து கேரளாவிற்கு ரயில் மார்க்கமாக எம்டிஎம்ஏ உயர் ரக போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்துள்ளனர்.

அவர்களிடம் சோதனை செய்தபோது 37 கிராம் எம்டிஎம்ஏ உயர் ரக போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த இளம்பெண் இடுக்கியை சேர்ந்த ரிஷானா பாத்திமா (18) என்பதும், அந்த வாலிபர் கோதமங்கலத்தை அடுத்த இரமல்லூரை சேர்ந்த அனந்துப்பிரசாத் (24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: