குன்னூர், மார்ச் 27: குன்னூரில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு குறித்து நகராட்சி ஆணையாளர் தலைமையில் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குன்னூர் நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணராம் தலைமையில் பெட்போர்ட் பகுதியில் நடைபெற்றது. இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ‘‘வாக்களிப்பது நமது கடமை’’, ‘‘100 சதவீதம் வாக்களிப்போம்’’ போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். பெட்போர்ட் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம், ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
