ஊட்டி, மார்ச் 23: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மலை பயிர்கள் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி திம்பட்டி கிராமத்தில் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி ராமதாஸ் தோட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த செயல்முறை விளக்கப் பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளான மஞ்சள் ஒட்டுப்பொறி, இன கவர்ச்சி பொறி மற்றும் வேப்பெண்ணை கரைசல் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சற்குணசீலன் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான ட்ரைகோடெர்மா விரிடி, பசிலோமைசிஸ் மற்றும் பேவேரியா ஆகியவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
