உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.10 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி காட்பாடி அருகே அமெரிக்க வாழ் இந்தியர்

பொன்னை, மார்ச் 20: காட்பாடி அருகே அமெரிக்க வாழ் இந்தியர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான முத்தரசிகுப்பம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெய தலைமையில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் வந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் இந்தியரான சுரேஷ் என்பது தெரியவந்தது. அவரது காரை சோதனை செய்தபோது, அதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சுரேஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அமெரிக்காவில் உள்ள தனது நண்பரின் மகளது திருமணத்திற்காக பட்டுப்புடவைகள் வாங்கச் காஞ்சிபுரத்துக்கு சென்றதாகத் தெரிவித்தார். இதற்காக சித்தூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி பணத்தை எடுத்து வந்ததால் அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.10 லட்சம் பணத்தை உடனடியாக காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: