புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி, அதன் தாக்கங்களை சமாளிப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு ஆகியோர் அரசு தரப்பிலும், காங்கிரஸ் சார்பில் தாரிக் அன்வர், முகுல் வாஸ்னிக், சமாஜ்வாடி கட்சி சார்பில் தர்மேந்திர யாதவ், பிஜு ஜனதா தளம் சார்பில் சஸ்மித் பாத்ரா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மேற்கு ஆசியா சூழல் குறித்து ஒன்றிய பாஜ அரசு மவுனம் சாதிப்பதாகவும், ஈரான் உச்ச தலைவர் மறைவுக்கு இந்தியா உடனடியாக இரங்கல் தெரிவிக்காததன் மூலம் தார்மீக பலவீனத்தை வெளிப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டின. காங்கிரசின் தாரிக் அன்வர் பேசுகையில், ‘‘ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறது. ஆனால் நாம் இன்னும் மவுன சாட்சிகளாகவே இருந்து வருகிறோம்’’ என்றார். மேலும், மேற்கு ஆசியா சூழல் தொடர்பாக மக்களவையில் விதி எண் 193ன் கீழும், மாநிலங்களவையில் விதி எண் 176ன் கீழும் விவாதம் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘பாகிஸ்தான் மேற்கொள்ளும் மத்தியஸ்த முயற்சிகளில் புதிதாக ஏதுவும் இல்லை. 1981ம் ஆண்டிலிருந்தே அந்த நாடு அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானைப் போல இந்தியா ஒன்றும் இடைத்தரகர் நாடு அல்ல. மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வலியுறுத்தி உள்ளார்’’ என்றார்.
மேலும், ஈரான் தூதரகம் திறக்கப்பட்ட உடனேயே வெளியுறவு செயலாளர் அங்கு சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வளைகுடா பிராந்தியத்தில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதும் மட்டும் தங்களின் முதன்மை நோக்கம் என்றும் இதுவரை இதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும் மேற்கு ஆசியா நெருக்கடி விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு உறுதுணையாக ஆதரவு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பின் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் அளித்த பேட்டியில், அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு அளித்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என கூறினர். மேலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
* பிரதமர் மோடி வராதது ஏன்?
அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது குறித்தும் எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இது குறித்து மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், ‘‘இந்த கூட்டம் இன்னும் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்க வேண்டும். இதற்கு முன், முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்மராவ் என அப்போதைய பிரதமர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக பிரதமர் மோடி பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை சமரசத்திற்கு உள்ளானதாக தோன்றுகிறது. வெளியார் ஆதிக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்’’ என அவர் எச்சரித்தார்.
