நக்சல்பாரி: எஸ்ஐஆர் முதல் துணைப்பட்டியலில் முதற்கட்டமாக 8 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரியில் உள்ள நக்சல்பாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா நேற்று பேசியதாவது: முறையற்ற முறையில் எஸ்ஐஆர் பணிகளை அமல்படுத்தி, மக்களுக்கு பா.ஜ துன்பத்தை ஏற்படுத்தி விட்டது. எஸ்ஐஆர் துணை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் துணைப் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் உடனடியாகக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்க முடியும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 60 லட்சம் வாக்காளர்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 27 லட்சம் வாக்காளர்களில், 8 லட்சம் பேரின் பெயர்கள் முதல் துணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தப் பட்டியல் எங்கே? அந்தப் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் ஏன் இதுவரை அரசு அலுவலகங்களில் ஒட்டப்படவில்லை? அந்தப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னரே, என்னால் அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்க முடியும். வயதான முதியவர்களை எஸ்ஐஆர் சரிபார்ப்பு பணிக்காக வரிசைகளில் நிற்க வைத்து, அவர்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கிய நிலையில், அதே மக்களிடம் வந்து வாக்குக் கேட்க பாஜவால் எப்படித் துணிய முடிகிறது?. நான் இருக்கும் காலம் வரை, மேற்குவங்கத்தில் தேசியக் குடியுரிமைப் பதிவேடு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது. தடுப்பு முகாம்கள் எதுவும் அமைக்கவும் அனுமதிக்கப்படாது. இவ்வாறு பேசினார்.
* மேற்குவங்கத்தில் சக்கர வியூகம் பா.ஜ புதிய திட்டம்
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ தேசிய தலைவர் நிதின்நபின் அங்கு ஆய்வு பணிக்காக 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் கொல்கத்தாவில் அவர் கட்சியின் வியூக கூட்டங்களை நடத்தினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேற்குவங்க தேர்தலுக்கான திட்டத்தை பா.ஜ சக்கர வியூகம் என்று பெயர் வைத்துள்ளது. இதில் வாக்குச்சாவடி மேலாண்மை, பிரச்சார களத்தை உருவாக்குதல் மற்றும் மிகச்சிறு அளவிலான மக்கள் திரட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பல அடுக்கு தேர்தல் திட்டமாகும். மேலும் கட்சியின் டிஜிட்டல் ரீதியான மக்கள் தொடர்பு, சமூக ஊடக வியூகம் மற்றும் கள அளவிலான கட்சிசார் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில், மாநிலப் பிரிவின் மூத்த தலைவர்களுடன் நிதின் நபின் பல உயர்மட்டக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார்.
