புதுடெல்லி: ரயில் டிக்கெட்டுகளை விற்கும் தரகர்கள் மீதான நடவடிக்கையாக, ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்து மூன்று கோடிக்கும் மேலான போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்றும், ரயில்களில் உள்ள இருக்கைகளில் சுமார் 78% ஏசி அல்லாத பிரிவுகளில் உள்ளன என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, நீண்ட தூர ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது குறித்த உறுப்பினர் ஒருவரின் துணை கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியது: ரயில் டிக்கெட்டுகளை விற்கும் தரகர்கள் பிரச்னையை கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்து மூன்று கோடிக்கும் அதிகமான போலி கணக்குகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், உண்மையான பயணிகள் ரயில் டிக்கெட்டுகளைப் பெற்று வருகின்றனர். ரயில்களில் உள்ள பெட்டிகளில் சுமார் 70 % பொதுப் பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்டவை. 78 % இருக்கைகள் குளிரூட்டப்படாத பிரிவுகளில் உள்ளன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விட தற்போதைய அரசு அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வசதியான மற்றும் மலிவு விலையில் சேவைகளை உறுதி செய்வதே அரசின் நோக்கம். இந்த நிதியாண்டில் இதுவரை 75,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில்வேயின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதால், அதன் விளைவாக ஏற்படும் விபத்துக்கள் 90 குறைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
