திருவனந்தபுரம்: நல்ல சாப்பாடு, நிம்மதியான தூக்கமும், வேலை பார்த்தால் கை நிறைய சம்பளமும் கிடைப்பதால் சிறை செல்வதற்காகவே மீண்டும் மீண்டும் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் கோவளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அடுத்தடுத்து 2 கடைகளை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்து கோவளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோவளம் அருகே உள்ள ஆவாடுதுறை பகுதியை சேர்ந்த திலீப் கான் (46) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கோவளம், விழிஞ்ஞம் உள்ளிட்ட பகுதிகளில் இவர் வீடுகள், கடைகள் என 26க்கும் மேற்பட்ட திருட்டை நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
மீண்டும் மீண்டும் திருட்டில் ஈடுபடுவது ஏன் என்று விசாரணையின் போது போலீசார் இவரிடம் கேட்டனர். மணியடிச்சா சோறு , நிம்மதியான தூக்கம், வேலை பார்த்தால் கை நிறைய சம்பளம், பாதுகாப்பு, இவை அனைத்தும் வேறு எங்கே கிடைக்கும்? அதனால் தான் மீண்டும் மீண்டும் திருடி சிறைக்கு செல்கிறேன் என்று திலீப் கான் கூறினார். அதுமட்டுமில்லாமல் சிலரிடம் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதால் சிறைக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதும் இதற்கு ஒரு காரணம் என்று அவர் மேலும் கூறினார். அதைக் கேட்ட போலீசார் தலை மேல் கை வைத்தனர். விசாரணைக்குப் பின்னர் போலீசார் திலீப் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கம்போல மீண்டும் சிறையில் அடைத்தனர்.
