48 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் காங். தலைமை அலுவலகத்தை நாளை மறுதினத்துக்குள் காலி செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு நோட்டீஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையகத்தை வரும் 28ம் தேதிக்குள் காலி செய்யுமாறு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜி.வெங்கடசாமி, அக்பர் சாலை 24ம் எண்ணில் இருந்த தனது அரசு பங்களாவை இந்திரா காந்தி பிரிவினர் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கினார். அதன்படி, அக்பர் சாலையில் உள்ள இந்த வளாகம், கடந்த 1978ம் ஆண்டு முதல் 48 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமாக இயங்கி வருகிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் இந்த அலுவலகத்தையே பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அக்பர் சாலையில் இயங்கும் காங்கிரஸ் தலைமையகம் மற்றும் ரைசினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் ஆகியவற்றை வரும் 28ம் தேதிக்குள் காலி செய்யும்படி ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டிலேயே அக்பர் சாலை பங்களா உள்ளிட்ட நான்கு அரசு கட்டிடங்களின் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்திருந்தது. ஆயினும், காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் அங்கேயே செயல்பட்டு வருகிறது. தற்போது அதையும், ரைசினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அணியின் தலைமை அலுவலகத்தையும் வரும் 28ம் தேதிக்குள்(நாளை மறுதினம்) காலி செய்யும்படி ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே, கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி டெல்லி கோட்லா சாலையில் இந்திரா பவன் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் நோட்டீசை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Related Stories: