பொள்ளாச்சி வனத்தில் நிலவும் வறட்சி நவமலை பகுதிக்குள் தடை மீறி டிமிக்கி தரும் சுற்றுலா பயணிகள்

*திருப்பி அனுப்பும் வனத்துறை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால், நவமலை பகுதிக்கு தடையை மீறி பயணிகள் செல்வதை தடுக்க, வனத்துனையினர் தடுப்பு ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையில்லாததால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வறட்சி துவங்கியுள்ளது. வறட்சியால் நீரோடைகளில் தண்ணீல் இல்லாமல், விலங்குகள் நீர் நிலையை தேடி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. மேலும், வனத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் வாடிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா பகுதியான டாப்சிலிப், கவியருவி உள்ளிட்ட இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இடையே தீ அபாயத்தை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வை, வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், வனத்தை தொட்டுள்ள கிராம பகுதியினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் சோதனைச்சாவடி வழியாக வால்பாறை, அட்டக்கட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளிடம், தடையை மீறி வனத்திற்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

தற்போது கவியருவிக்கு செல்ல தடையால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். சில பயணிகள், எதிரே உள்ள நவமலை பகுதிக்கு சென்று வரலாம் என வாகனங்களில் செல்ல முயற்சிக்கின்றனர்.

ஆனால், அங்கு வனத்துறையினர் தடுப்பு ஏற்படுத்தி, நவமலை பகுதிக்கு செல்ல முற்படும் பயணிகளை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தடையை மீறி யாரேனும் வனத்திற்குள் செல்கின்றார்களா என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: