திருநர் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு ஒன்றிய அரசை கண்டித்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

மதுரை : ஒன்றிய அரசின் திருநர் திருத்த மசோதாவை கண்டித்து, மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஒன்றிய அரசின் திருநர் திருத்த மசோதாவை கண்டித்து, காந்தி மியூசியத்தில் நேற்று திருநங்கையர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னதாக சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாவட்ட நீதிமன்றம் பகுதியிலிருந்து காந்தி மியூசியம் வரை மதுரை மாநகராட்சி (பொறுப்பு) மேயர் நாகராஜன், திருநங்கை பாதுகாப்பு நல அமைப்பைச் சேர்ந்த பிரியா பாபு, ருத்ரா, மணி நினைவு திருநங்கைகள், திருநம்பிகள் அறக்கட்டளை நிறுவனர் நிரோஷா உட்பட 150க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்திற்கு முன், செய்தியாளர்களை சந்தித்த திருநங்கைகள் ஒருங்கிணைப்பாளர் பிரியா பாபு கூறியதாவது: எங்களை குறிப்பிட அரவாணி, யூனக் என்ற வார்த்தைகளை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. உண்மையில் அரவாணி என்ற சொல்லை நாம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்துவதை நிறுத்தி, திருநங்கை, திருநம்பி என்ற சொல்லாடல்களை வழங்கியிருக்கிறோம். ஆனால் அந்தச் சொற்களை அவர்களின் திருத்த மசோதாவில் பயன்படுத்தவே இல்லை.

அதேபோல அவர்கள் குறிப்பிட்டுள்ள ‘யூனக்’ என்ற சொல்லின் பொருள் ‘விதையடிக்கப்பட்ட ஆண்’ என்பதாகும். ஆகையால் அந்தச் சொல்லையும் இந்த திருத்தச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். மூன்றாவது, திருநம்பிகளையும் இதில் சேர்க்க வேண்டும். நான்காவது, ஒரு பாலின அடையாள அட்டையை, நாங்கள் மருத்துவர்களிடம் சென்று பெற வேண்டும். அதன்பிறகு மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து, அவரின் கையெழுத்து பெற்ற பின் தான் எங்களுக்கு திருநங்கை அடையாள அட்டை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதனால், சட்டரீதியான எங்களுக்கான உரிமைகளைப் பறித்து, அரசின் கையில் ஒப்படைப்பதை கண்டிக்கிறோம். ஏனெனில், பிறப்புரிமை என்பது தாம் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தாமே அறிவிப்பதாகும். ஆனால் இந்த சட்டத்திருத்தத்தில் அதனை நாங்கள் தெரிவிக்காமல் மற்றொருவரின் கட்டுப்பாட்டில் வைப்பது தெரிகிறது.

அதேபோல, வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்படும் எங்களை பாதுகாக்கும் வேலைகளை செய்வோருக்கு தண்டனை வழங்கும் விதமான சட்டங்கள் உள்ளன. அவற்றையும் நீக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு கூறினார்.

Related Stories: