விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் இவர்கள் தான் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள். எடப்பாடி பழனிசாமியும், நானும் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள். பழனிசாமி ஊர்ந்து சென்று முதல்வரானார். தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கு விசுவாசமாக இல்லாதவர், வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பாரா? பழனிசாமி பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை.
உங்களுக்கே தெரியும். சி.வி.சண்முகம், சீனிவாசன், உதயகுமார் போன்றோரை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? தலையை பிய்ச்சு கொண்டு பேய் பிடித்த மாதிரி பழனிசாமி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டிக் கொண்டிருக்கிறார். அவரும் போய்யா என்று கூறி விட்டார். மக்களவை தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட் காலி, 14 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. பழனிசாமியும், உதயகுமாரும் அதிமுகவை குழி தோண்டி புதைத்து விட்டனர். இவ்வாறு பேசினார்.
