கோவைக்கு ஜாக்பாட்; ‘டோர் பை டோர்’ அதிமுக பரிசுமழை

 

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. சில தொகுதிகளில் மிக சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி கண்டனர். ஆனால், இம்முறை நிலைமையே வேறு. திமுக கூட்டணி கட்சிகள் கோவை மாவட்டம் முழுவதும் கோலோச்சுகின்றன. இந்த ரிப்போர்ட் அதிமுக மேலிடத்துக்கு செல்லவே, உள்ளூர் தலைவர்கள் கிலியில் உள்ளனர். இதனால் கோவை மாவட்ட தொகுதிகளை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் எனக்கருதி, வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருகின்றனர். தங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ, அவ்வளவு செலவு செய்து, தட்டு, டம்ளர், ஹாட்பாக்ஸ், குடை, தண்ணீர் டிரம் என பரிசு பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அந்தந்த பகுதி குடோன்களில் அடைத்து வைத்துள்ளனர். இவற்றை உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் துணையுடன், சத்தம் இல்லாமல் வாக்காளர்களின் வீடு தேடிச்சென்று, சப்ளை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தொண்டாமுத்தூர் தொகுதி டாப்..பில் உள்ளது.

இத்தொகுதியில் கடந்த இரண்டு மாசமாக பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்து, நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதும் விநியோகம் சைலண்ட் ஆக நடந்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருட்கள், கூலித்தொழிலாளர்களுக்கு வேட்டி-சட்டை, குடை, தண்ணீர் பாட்டில் என விதம் விதமாக பரிசுப்பொருட்கள் களம் இறங்குகின்றன. பொள்ளாச்சி மற்றும் கோவை வடக்கு தொகுதிகளில் கூடுதலாக சுவர் கடிகாரங்களும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பூத்துக்கும் 300 குடும்பங்கள் என கணக்கிட்டு, டோக்கன் வழங்கப்பட்டு, சத்தம் இல்லாமல் டோர் பை டோர் விநியோகம் நடந்து வருகிறது. இவற்றை பெற்றுக்கொண்ட சில வாக்காளர்கள், ‘‘இதெல்லாம் உழைச்சு வாங்கின பொருளா? முறைகேடாக சம்பாதித்த பணம் தானே இப்படி பரிசுப்பொருளாக திரும்பி வருகிறது…’’ என்கின்றனர்.

 

Related Stories: