நெல்லை: காங்கிரஸ் அளித்துள்ள உத்தேச பட்டியலில் இம்முறை நெல்லை மாவட்டத்தில் இரு தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. நாங்குநேரி மட்டுமின்றி நெல்லை தொகுதியையும் காங்கிரஸ் கேட்டு வருகிறது. மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இம்முறை காங்கிரஸ் கட்சியானது, தங்களுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட சீட்டுகளை விட கூடுதல் சீட் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன்பேரில் கடந்த தேர்தலில் 25 சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரசிற்கு 28 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட 25 இடங்கள் தவிர்த்து, இம்முறை கூடுதலாக 3 இடங்களையும் கேட்டு பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அந்த வகையில் காங்கிரஸ் தற்போது கேட்டுள்ள உத்தேச பட்டியலில், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆலங்குளம், விருதுநகர், ராமநாதபுரம், காரைக்குடி, தென்காசி, திருவாடானை, முதுகுளத்தூர், நாங்குநேரி, ஊத்தங்கரை, முசிறி, நெல்லை, மணப்பாறை, சோளிங்கர், சிதம்பரம், மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு, வேடசந்தூர், மதுரை மத்தி, கோவை தெற்கு, மதுராந்தகம் (தனி), கலசப்பாக்கம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, வேளச்சேரி, எழும்பூர்(தனி), பொன்னேரி(தனி), மயிலாடுதுறை, கூடலூர்(தனி), கும்பகோணம், உதகை, சிவகாசி, விருதாச்சலம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நாங்குநேரி, நெல்லை ஆகிய இரு தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதுபோல் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி ஆகிய இரு தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூடுதலாக போட்டியிடும் நிலையில், அந்த 3 இடங்களும் தென்மாவட்டங்களில் இருக்க வேண்டும் என அக்கட்சி விரும்புகிறது. எனவே கூடுதலாக பெறப்பட்டுள்ள 3 தொகுதிகளும் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது.
