தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுகவில் நேர்காணல் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளுக்கு ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்த நபர்களை ஒருசேர அமரவைத்து, நேர்காணல் நடத்தி வருகிறார் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் சரி, 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தினார். இம்முறை நேரம் இல்லாததால், மாவட்ட வாரியாக ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்த அனைவரையும் ஒரே நேரத்தில் அமரவைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இந்த நேர்காணலில், பொதுவான கேள்விகளே கேட்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என கொங்கு மண்டல திமுக நேர்காணல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘உங்கள் தொகுதியில் கள நிலவரம் எப்படி இருக்கிறது? அதிமுக-பாஜ கூட்டணிக்கான ஆதரவு எப்படி உள்ளது? அவர்களைவிட நம் கூட்டணிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது? நடிகர் விஜய் கட்சிக்கு ஆதரவு இருக்கிறதா? நான்கு முனை போட்டியால் திமுகவுக்கு சாதகமா? பாதகமா? என்பது போன்ற பொதுவான கேள்விகளையே கேட்டார். இதற்கு தகுந்த பதில்களை நிர்வாகிகள் சுருக்கமாக தெரிவித்தனர்.
அந்த பதில், திமுகவின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அதேசமயம், இந்த வெற்றியை கடினமான தேர்தல் பணிகளால் தான் பெற முடியும், அலட்சியமாக இருந்துவிடக்கூடாது எனவும் சிலர் கூறினர்.
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கும் சேர்த்து, மொத்தம் 700க்கும் மேற்பட்டவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். இவர்களில், ஆர்.எஸ்.புரம் பகுதி திமுக செயலாளரும், கோவை மாநகராட்சி 72வது வார்டு கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, பங்கேற்றார். இதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இவரது மகள் கிருபா சபரிநாதனும் விருப்ப மனு அளித்திருந்தார். இவரும், இந்த நேர்காணலில் பங்கேற்றார். இருவரிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது, ‘‘யாருக்கு சீட் கொடுத்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விடுவோம். இதே நிலை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே உருவாக வேண்டும், கொங்கு மண்டலத்தில் 100 சதவீதம் வெற்றியை நாம் பதிவுசெய்ய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்’’ என இருவரும் கூட்டாக முதல்வரிடம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர், ‘‘மகிழ்ச்சி. இங்கு வந்துள்ள அனைவருக்கும் இது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்…’’ என்றார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த 220 நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது, ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரம் எப்படி இருக்கிறது? என்பதை நிர்வாகிகளிடம் விரிவாக முதல்வர் கேட்டறிந்துள்ளார். அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்துவது, அடுத்து என்னென்ன தேவை இருக்கிறது, எந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், வெற்றி வாய்ப்பு பற்றி கேட்டுள்ளார். சில நிர்வாகிகள், கடந்த தேர்தலின் போது வாக்குகள் ஏன் குறைந்தது என்பது பற்றியும், அந்த வாக்குகளை நாடாளுமன்ற தேர்தலின் போது கூடுதலாக பெற்றது பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைத்தனர். இவை அனைத்தையும் முதல்வர், பொறுமையாக கேட்டுக்கொண்டு, கட்சி தலைமை நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும், அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளார். இந்த நேர்காணலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் மிக பொறுமையாக பேசி, அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்தார். இதனால், எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது, புதிய உற்சாகத்தை தந்துள்ளது என நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறினர்.
நெல்லை, பாளை. தொகுதிகளில் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், உங்களுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது? மக்களுக்காக அவர் என்னென்ன பணிகள் எல்லாம் செய்துள்ளார்? மக்களோடு தொடர்பில் அவர் இருந்து வருகிறாரா? திமுகவுக்கு நற்பெயர் ஏற்படும் வகையில் அவருடைய பணிகள் இருந்ததா? மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடியவரா? திமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறாரா? என்பது போன்ற அதிரடி கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு அவர்கள், முதல்வர் அறிவித்த திட்டங்கள், மிகவும் பாராட்டுக்குரியது, அந்தத் திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பினரும் பயன்பெற்றுள்ளனர். முதல்வரின் சமூக நலத்திட்டங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. நெல்லை தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை வெற்றி பெற்றுள்ள பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவராகி விட்டதால் அவர் அதிகமாக தொகுதி பக்கம் வருவதில்லை. மக்களோடு நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு அவருக்கு இல்லை. உள்ளூரில் நடைபெறும் விசேஷங்களுக்கும் அவர் அதிகம் செல்வதில்லை என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட முதல்வர், திமுகவை வெற்றி பெற வைப்பதற்கு அனைவரும் கடுமையாக உழையுங்கள் என முதல்வர் தெரிவித்தார். இதனால் நேர்காணலுக்கு சென்று வந்த திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டன்ற தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது. அதில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 21 பேரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். ‘‘போட்டியிட விருப்ப மனு அளித்த உங்கள் 21 பேருக்கும் சீட் வழங்கிவிட்டேன். சிம்மாசனத்தில் (இருக்கையில்) அமர்ந்து விட்டீர்கள். மகிழ்ச்சி தானே. ஆனால் தேர்தலில் போட்டியிட ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்க முடியும். எனவே, தலைமை அறிவிக்கின்ற ஒருவரின் வெற்றிக்கு, இந்த ஸ்டாலினே நிற்பது போல் நினைத்து மற்ற 20 பேர் உள்ளிட்ட தொகுதியில் உள்ள உடன்பிறப்புகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து நேர்காணலில் பங்கேற்ற சிலர் கூறுகையில், ‘‘நாங்கள் விருப்ப மனு கட்டியதன் மூலம், தலைவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்த ஸ்மைல் போதும். நகைச்சுவையுடன் கலகலப்பாக அனைவருக்கும் சீட் வழங்கி விட்டேன் என அவர் எங்களிடம் பேசியதே போதும். மனம் நிறைவாக உள்ளது. சீட்டு கிடைக்காவிட்டாலும் கூட பிரச்னையில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியிலும் தலைமை பார்த்து யாருக்கு சீட் வழங்கினாலும் முதல்வர் கூறியது போல் முதல்வரே நிற்பது நினைத்து, வெற்றி பெற உழைத்து, எதிரிகளை தெறிக்க ஓட விடுவோம்’’ என்றனர்.
