வேலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜகூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எஸ்ஆர்கே அப்பு, இந்த முறை எப்படியாவது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒவ்வொரு பகுதியாக சுற்றி பரிசு பொருட்களையும் அள்ளி கொடுத்து வந்தார். எப்படியும் இந்த முறை தேர்தலில் நின்று ஜெயித்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அதற்கு புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளதாக எண்ணுகிறார். இதனால் ஏசிஎஸ் களத்தில் இறங்கும் முன் முந்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த அதிமுக மாநகர செயலாளர் அப்பு, முன்கூட்டியே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
தேர்தல் தேதி அறிவித்தாலும் இன்னும் அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு சீட், எந்தந்த தொகுதிகள் என்று இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்ைல. ஆனாலும் வேலூர் தொகுதிக்கு நான் தான் வேட்பாளர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு காலை, மாலை, இரவு நேரங்களில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பெயரளவுக்கு கூட கூட்டணிகட்சி நிர்வாகிகளை அழைக்காமல் தனியாக பிரசாரத்தை தொடங்கி உள்ளார். ரம்ஜான் பண்டிகையான நேற்று திமுகவினர் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த எஸ்ஆர்கே அப்பு திமுகவினர் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
