தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என்று 4 முனைப்போட்டி உருவானது. இதற்கு மத்தியில் பாமக நிறுவனர் ராமதாஸ், அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய சசிகலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். மகன் அன்புமணி செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாசும், எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலாவும் தேர்தலில் அதிமுக கூட்டணியை எதிர்த்து கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணிக்கு ராமதாசின் தீவிர ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் அருள் கூறுகையில், ‘ராமதாஸ் சசிகலாவுடன் அமைத்த கூட்டணியில் எனக்ேகா, ஜி.கே.மணிக்கோ அல்லது கட்சியின் நிர்வாகிகளுக்கோ எந்த உடன்பாடும் இல்லை. விருப்பமும் இல்லை. எங்களது எண்ணத்திற்கு மாறான கூட்டணியை ராமதாஸ் அமைத்துள்ளார். ெதாண்டர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் நாங்கள் வேறுநிலைப்பாட்டை எடுக்க உள்ளோம். என்னைப் பொறுத்தவரை இன்னும் ஓரிரு நாளில் பத்திரிகையாளர்களை அழைத்து, இதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவேன், என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அருள் எம்எல்ஏ திமுகவில் இணைய உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.
