தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு; பாஜ எம்எல்ஏ திடீர் ராஜினாமா; சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல்

 

புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஊசுடு தொகுதியில் பாஜ சார்பில் சாய் ஜெ சரவணன்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முதலில் குடிமைபொருள் அமைச்சராக பொறுப்பேற்றார். பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த ஓராண்டுக்கு முன் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு கடைசி வரை இலாகா ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஊசுடு தொகுதியில் சாய்.ஜெ.சரவணன்குமாருக்கு பாஜவில் சீட் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு தீப்பாய்ந்தான் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் சாய் ஜெ சரவணன்குமார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போதும், சீட் கொடுக்காமல் மறுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள், அவர் தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட்டனர். அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பாஜதலைவர் நிதின் நபினுக்கு இ-மெயில் மூலம் தனது கடிதத்தை அனுப்பினார். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நேற்று மதியம் இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள பாஜ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாய் ஜெ சரவணன்குமாருக்கு மீண்டும் தொகுதியில் சீட் வழங்கப்படாததால் நாங்கள் ஒட்டுமொத்தமாக பாஜ பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அப்போது கட்சி பதவிக்கான கடிதத்தை கிழித்து எறிந்து பாஜஒழிக என கோஷமிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, பாஜ சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திருபுவனை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட சாய் ஜெ. சரவணன்குமார் மனு தாக்கல் செய்து உள்ளார். அதே நேரத்தில் தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Related Stories: