சென்னை: திமுக கூட்டணி வலுவாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் இன்று முதல் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் (சென்னை) பெறப்பட்டு வருகின்றன. இதனை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடமிருந்தும், நாளை (22ம் தேதி) கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடமிருந்தும், நாளை மறுநாள் (23ம் தேதி) ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடமிருந்தும், இறுதியாக 24ம் தேதி திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடமிருந்தும் விருப்ப மனுக்கள் பெறப்படும்.
விண்ணப்ப படிவக் கட்டணமாக ரூ.100ம், விருப்ப மனு கட்டணமாக ரூ.5,000-ஐயும் செலுத்த வேண்டும். திமுக கூட்டணியில் நடைபெறும் பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை கூட்டணிகள் வந்தாலும், புதிய கூட்டணிகள் உருவானாலும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி வலிமையுடன் வெற்றி பெறும். கூட்டணி நலனுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்படாது. அக்கட்சிக்கு, கட்சிநலன் முக்கியம்தான்; ஆனால் கூட்டணியில் வலுவாக இருப்பதும் அவர்களுக்கு முக்கியம். இதில் மாற்று கருத்து இல்லை. தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது உண்மைதான். விரைவில் சுமுகமாக முடிவடையும்.
போயஸ் கார்டனை நோக்கி வந்த நிலை மாறி, தற்போது டெல்லியை தேடி செல்லும் நிலையில் அதிமுக உள்ளது. ஒரு இலக்கிலிருந்து 2 இலக்குக்கு செல்வது தற்காலிக வெற்றியாக இருக்கலாம். ஆனால் கொள்கை பிடிப்புடன் இருப்பதுதான் முக்கியம். பதவி ஆசைக்காக அடிக்கடி நிலைபாட்டை மாற்றி கொள்ளவில்லை, வலதுசாரி அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் பின்வாங்கவில்லை என்பதுதான் பொது சமூகத்தில் விசிக மீதான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில்தான் என்னுடைய அனைத்து நகர்வுகளும் உள்ளன. வெளியிலிருந்து விமர்சனம் செய்யலாம்; ஆனால் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. எங்கள் வலிமை எங்களுக்கு தெரியும்.
சுதந்திரமாக, எல்லாம் தெரிந்து, எங்கள் வலிமைக்கு ஏற்பத்தான் முடிவெடுக்கிறோம். எங்கள் மீதான நம்பிக்கை பொதுவெளியில் மேலும் வலுப்பெற வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. கூடுதல் தொகுதிகள் பெறுவோம். விரைவில் தெரிய வரும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
