கட்சியில் அங்கீகரிக்கப்படாத நபரான அன்புமணி பாமக உறுப்பினரே கிடையாது: சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு

சென்னை: பாமகவின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பான உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க வேண்டும் எனக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், அன்புமணி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பாமக கட்சி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி டாக்டர் அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், ராமதாஸ் தன்னை தானே தலைவர் என்று அறிவித்துக் கொண்டது பாமகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. அவர் நிறுவனர் என்ற அடிப்படையில் பாமக கட்சியில் ஆலோசனை, வழிகாட்டுதல் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு ராமதாஸ் தரப்பு பதிலளிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, ராமதாஸ் தரப்பில் 18 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், பாமக சட்ட விதிகளுக்குட்பட்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் ராமதாஸ் என்பதால் இந்த வழக்கு தொடர்வதற்கான அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது. அன்புமணி பாமகவின் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டவர்.அன்புமணி தலைவராக இருந்த காலக்கட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததால்தான் பாமக கட்சியின் அங்கீகாரம் பறிபோனது. இதற்கே அன்புமணி தான் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராமதாஸ் தாக்கல் செய்த இந்த பதில் மனு மீது வாதங்களை வைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அன்புமணி தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்க கூடாது என்றும் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வழக்கை அன்புமணி தரப்பு இழுத்தடிப்பு செய்வதால் உடனே வாதிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, பாமக கட்சியில் இருவரிடையே பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கில், பாமக பொதுசெயலாரான தன்னை இணைக்காமல் ராமதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்று தெரிவித்தார். மூன்று தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டதை கேட்ட நீதிபதி தர்மபிரபு, ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பும் மார்ச் 13ம் தேதி வாதிடவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: