3ல் உதயசூரியன் சின்னம், 1ல் தனிச்சின்னம்; திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: திமுக- மதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், 3 தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் தேதி வரும் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் திமுக, தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மநீம, தவாக, கொமதேக, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. வரும் நாட்களில் அவர்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை வேகப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட, திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதிக்கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை மதிமுக உடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் தொகுதி பங்கீட்டு குழு மதிமுகவுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகள் விவாதித்தனர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மதிமுக போட்டியிடக்கூடிய சின்னம் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக- மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்ததத்தில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவும் இன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, தமிழ்நாட்டில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும், அதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:‘வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் பதிவை பாதுகாப்புக்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். 3 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: