மாற்று கட்சிக்காரர்களையும் மதிக்கக்கூடியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: காசி முத்துமாணிக்கம் புகழாரம்

திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்கிற வரிகளுக்கு ஏற்ப, ஆன்லைன் லாட்டரி ஆதரவு, நீட் எதிர்ப்புக்கு எதிர்ப்பு, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தடுப்பு என பல்வேறு இடையூறு செய்த கவர்னர் ஆர்.என்.ரவி மாறுதல் என்றவுடன், விட்டுச்சுடா சனியன் என நிம்மதிப் பெருமூச்சு விடுவோர் வாழும் காலத்தில், ஒன்றிய அரசின் எதிர்க்கட்சி ஆட்சி உள்ள மாநிலங்களான, கேளரா, தெலுங்கானா கவர்னர் மாறும்போது கண்டுகொள்ளாத மாநில முதல்வர்களுக்கு மத்தியில், தமிழக கவர்னர் ரவி மாற்றம் என்ற செய்தி வந்த உடன், தமிழக கவர்னர் மாளிகை தேடி சென்று, பட்டுப் பொன்னாடையுடன் கூடிய வள்ளுவர் சிலையை பரிசளித்து வாழும் வள்ளுவனாய் வாழுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மற்றவர்கள் எழுப்பிய சிலைகளில் காகம் உட்காரும், என் தலைவன் கலைஞர் எழுப்பிய சிலையில் மட்டும் தான் மேகம் உட்காரும் என வியக்கத்தக்க வகையில் கன்னியாகுமரியில் வள்ளுவனுக்கு சிலை வைத்து உயர்ந்தார் கலைஞர் என்றால், வள்ளுவனாகவே வாழ்ந்து காட்டி வருகிறார். தன்னை டேஞ்சரானவர் என்று சொன்ன எச்.ராஜா உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் மருத்துவமனைக்கு இரு முறை நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி வந்தவர். பாஜவின் மூத்த தலைவரும், மேகாலயாவின் கவர்னராக இருந்தவருமான இல.கணேசன் சென்னை வந்த இடத்தில் மரணம் என்றவுடன் ஒருமுறைக்கு இருமுறை சென்றதுடன், மேகாலயா கவர்னருக்கு தமிழக அரசின் செலவில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தவர்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்றாலே தியாகிகள் தான். ஆனால் அவர்கள் மரணித்த போது அடக்கம் மட்டுமே. ஆனால் தோழர் நல்லகண்ணு மறைந்த போது முதல்வர் தளபதி ஒரு தொண்டரைப் போல் ‘வீரவணக்கம்’ முழக்கத்தை தானே எழுப்பிய அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அனுப்பி வைத்தார். தனது தந்தைக்கோ, தனது பெரியப்பா பேராசிரியர் அன்பழகனுக்கோ தராத முழக்கத்தை, தோழர் நல்லகண்ணுவுக்கு தந்து பெருமை தந்தார். மாற்றுக் கட்சிக்காரர்களை மதிக்கும் மாண்புமிக்கவர் தளபதி. சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம் அடைந்தபோது அதிமுகவிலிருந்து ஒருவர் கூட வரவில்லை. ஆனால் எதிரியாக இருந்தாலும் தளபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பள்ளி பேக்கில் ஜெயலலிதா படம், எடப்பாடி படம் இருந்தால் பரவாயில்லை. 2 ஆண்டுகளுக்கு ரூ.18 கோடிக்கு பள்ளி பேக் வீணாக போகவேண்டாம். அந்த ரூபாய்க்கு கொரோனா மருந்து வாங்கலாம் என்று சொன்னவர். 5 முறை முதல்வராயிருந்த தன் தந்தைக்கே இடம் தராத எடப்பாடி பழனிசாமி வசதியாக வாழ, அரசியல் ஆலோசனை நடத்திட, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய சிறிய இல்லத்தை ஒதுக்காமல், முதல்வருக்குரிய பெரிய பங்களாவை தந்த பெருந்தன்மைக்கானவர். அதனால்தான் சொன்னேன், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்கிற வரிகளுக்கு ஏற்ப வள்ளுவனாகவே வாழ்பவர். இவ்வாறு கவிஞர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: