கோவை,மார்ச்10: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே வனப்பகுதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கும்,வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் உடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்பினர் வனப்பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை (வெக்ட்) சார்பில் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் வழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள வனப்பகுதிகளில் தூய்மை பணிகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 220 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், சுமார் 260 கிலோ அளவிலான மதுபான பாட்டில்கள் அகற்றப்பட்டன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
