தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு இன்னும் முடிவாகவில்லை. இதனால் நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த எம்பி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்ற பாஜ குறிவைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியும் ஒன்று. திருவண்ணாமலை எம்பி தொகுதியில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகிறது.
இதில் பாஜ சார்பில் போட்டியிட்ட அஸ்வத்தாமனுக்கு கலசபாக்கம் தொகுதியில் மட்டும்தான் ஓரளவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால் அஸ்வத்தாமன் எப்படியும் கலசபாக்கம் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், போளூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த முறை கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 6ம் தேதி சனிப்பெயர்ச்சியன்று, படவேடு பகுதியில் தனது பிரசார வண்டிக்கு பூஜை போட்ட அதிமுக எம்எல்ஏவும் மாஜி அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அங்கிருந்தவர்களிடம் வாகனத்துக்கு கீழே நின்றபடி வாக்கு சேகரித்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருப்பதால், எல்லாம் வெற்றிதான் என ஜோசியர் சொன்னதாகவும், அதன் அடிப்படையில்தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பூஜை போட்டு பிரசாரத்தை தொடங்கி இருப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
மேலும் சுவர் விளம்பரங்களில் இரட்டை இலை சின்னம் வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என எழுதப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளார்கள். அதேபோல் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே இதுபோன்ற நடவடிக்கைகள் அதிமுக நிர்வாகிகளையும், கூட்டணி கட்சியினரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.
