சென்னை – டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறால் ரத்து: 148 பயணிகள் அவதி

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்றிரவு 8 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 4லிருந்து, புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 148 பயணிகள், டெல்லி செல்வதற்கு, இரவு 7 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அனைத்துவித சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

இந்த விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக, விமானி விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பது உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதோடு விமானம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்க தொடங்கினர்.

ஆனால் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாது என்று பொறியாளர்கள் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகம், பயணிகளிடம் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், இந்த விமானம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், ஏர் இந்தியா அலுவலக கவுண்டரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சில எம்பிக்களும் இருந்தனர். அவர்கள், நாளை காலை நாடாளுமன்றம் கூடுகிறது.

அந்தக் கூட்டத் தொடருக்கு, அவசரமாக நாங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதைப்போல் திடீரென விமானம் ரத்து என்று சொன்னால் எப்படி என கேட்டனர். ஏர் இந்தியா ஊழியர்கள் பயணிகளை அமைதிப்படுத்தியதோடு, அவசரமாக டெல்லி செல்ல இருக்கும் ஒரு சில பயணிகளை மட்டும், நேற்றிரவு 9.40 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில், பயணிக்க டிக்கெட்களை, மாற்றி அனுப்பி வைத்தனர்.

மற்ற பயணிகள், மற்றொரு நாட்களுக்கு தங்கள் விமான பயணத்தை மாற்றிக் கொண்டு, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்படுவதற்கு முன்னதாகவே, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்துக்கு ஏற்படவிருந்த அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: