சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: நடிகர் விஜய் மக்களுக்கு அறிவித்துள்ள வாக்குறுதிகள், புலியைப் பார்த்து பூனை, சூடு போட்டுக்கொண்ட கதை என்று சொல்வார்கள். அதை போல் தான் இருக்கிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. புதிய பல அறிவிப்புகளையும், மகளிர் நலன் கருதி அறிவித்துள்ளது. இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு, இதைப் போன்ற வாக்குறுதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதைப் போன்ற வாக்குறுதிகள், எந்த விதத்திலும் திமுக கூட்டணியின் செல்வாக்கை பாதிக்காது. காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகளுக்கு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி, உங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுவது குறித்து, தங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து, எங்கள் கட்சியின் பேச்சு வார்த்தை இன்னும் முடிவடையவில்லை. பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்பு, இந்த கேள்வியை நீங்கள் எழுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.
