ஓ.பன்னீர்செல்வம் மீதான தேர்தல் வழக்குகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தது, இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து பிரசாரம் செய்தது தொடர்பாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி, தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக தகுதியான அதிகாரி புகார் அளிக்காமல் காவல்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு வழக்கில் காலதாமதமாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான நான்கு தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: