சென்னை: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் இறுதி செய்யப்படும் என கனிமொழி எம்பி கூறினார். பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி டெல்லியில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் அது முழுமை பெற்று, முதலமைச்சரிடம் வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்று (நேற்று) அழைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து, நிச்சயமாக விரைவில் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும். திராவிட கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் என்ற நம்பிக்கையாலும், திமுக மீது உள்ள நம்பிக்கையாலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் திராவிட இயக்கத்தை உண்மையாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார், திராவிட மாடல் ஆட்சியை தரக்கூடியவர்கள் யார் என்று தமிழக மக்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
