திண்டுக்கல்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது ஜெயலலிதாவின் முதுகில் குத்திய செயல் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ்-திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மதுரை பாஜக கூட்டத்தில் பெரியார் படத்தை அகற்றியுள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், பொதுக்கூட்டத்தில் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் படங்களை அகற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரை தமிழ்நாட்டில் தான் உள்ளது; உத்தரப்பிரதேசத்தில் இல்லை. சங்பரிவார்களின் கனவு பலிக்காது, திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றமாகவே இருக்கும். ஒரு காலத்திலும் அயோத்தியாக மாற தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். பிரதமரின் முருகன் தரிசனம் அவருக்கு நல்வழி காட்டுவதாக அமைய வேண்டும். தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமில்லை. விசிக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு விரைவில் அறிவிக்கப்படும். நாங்கள் அங்கீகாரம் பெற்ற மாநில கட்சி என்பதால், சின்னம் குறித்து எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிட இருக்கிறோம். தொகுதிகள் எத்தனை என்பது திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும்.
பாஜக மாநில தலைவர் பாஜகவில் இருந்து அமைச்சர்கள் உருவாகுவார்கள் என அண்மையில் கூறியிருந்தது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. பாஜக, அதிமுகவுடன் அத்தகைய உடன்பாடு செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை தருகிறாரா அல்லது உண்மையிலேயே திரைமறைவில் பேசப்பட்ட உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாரா என்று பார்ப்போம். பீகார் தேர்தலில் நிதீஷ்குமாரை பாஜக கையாண்டது போல தமிழ்நாட்டில் அதிமுகவையோ, திமுகவையோ எளிதாக கையாண்டு விட முடியாது. விஜய் விவாகரத்து குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என திரும்பத் திரும்ப வலியுறுத்தியவர் ஜெயலலிதா. அவரது விருப்பத்திற்கு மாறாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது ஜெயலலிதாவின் முதுகில் குத்திய துரோகச் செயல். ஓபிஎஸ் மற்றொரு திராவிட இயக்கமான திமுகவில் இணைந்துள்ளார். இது திமுக கூட்டணிக்கு வலுச் சேர்க்கும். ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர்கின்றனர். இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
