சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் நேற்று கலந்து கொண்ட எம்பி கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். மிகவும் சாதுர்யமாக முதல்வர் செயல்படுகிறார். மிகப்பெரிய கூட்டணியை முதல்வர் அமைத்துள்ளார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். திமுக, காங்கிரஸ் கூட்டணி கலைஞர், சோனியாவால் அமைக்கப்பட்ட கூட்டணி. ஒரு வெற்றிகரமான கூட்டணி. சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சுமுகமான உடன்பாடு ஏற்படும். மதுரை வரும் மோடி திருப்பரங்குன்றம் மட்டும் செல்லாமல் முருகனின் அறுபடை வீட்டுக்கும் செல்ல வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங்கள் வெறும் அறிவிப்பாகத்தான் இருக்கும். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் பிரதமர் வரத்தான் செய்கிறார். முன்பே தேர்தல் நேரத்தில் நிறைய முறை அவர் வந்துள்ளார். பாஜ தோற்றுள்ளது. அதுபோல தற்போதும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
