சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
சமீப காலமாக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து வருகிறார்கள். கடந்த மக்களவை தேர்தலில் நாற்பத்திற்கும் நாற்பது என்கிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதை பாஜக ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகும் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒப்புதல் வழங்க கடந்த 4 ஆண்டுகளாக மறுத்து வருகிறார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்து கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை ஒன்றிய பாஜக அரசு சீரழித்து வருகிறது.
இதைப்போல மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துவரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகிறார்கள். 2019 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 7 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?. இதே ஆண்டில் மற்ற மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட பல எய்ம்ஸ் மருத்துவ மனைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் பயன்பாட்டிற்கு வராதது ஏன்?.
அதேபோல ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.3000 கோடி நிதியை ஒன்றரை ஆண்டுகளாக தராமல் மறுக்கப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண நிதி ரூ, 35 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ. 276 கோடி தான் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் வரி வசூலில் உத்திர பிரதேச மாநிலம் ஒரு ரூபாய் செலுத்தினால் ரூ. 2.02, மத்திய பிரதேசத்திற்கு ரூ. 1.70 திரும்ப தரப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு வழங்குகிற ஒரு ரூபாய்க்கு 26 காசு தான் திரும்ப தரப்படுகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியில் இந்தியாவிலேயே உள்ள மாநிலங்களில் ஒன்றிய பாஜக அரசால் கடுமையாக வஞ்சிக்கப்படுவது தமிழ்நாடு தான். அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் கட்டுக்கோப்பான இந்தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்து பாஜகவை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்து வருகிறார்கள். ஆயிரம் முறை நரேந்திர மோடி, அமித்ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக பங்கேற்கும் கூட்டணிக்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள்.
