ராமதாஸ்-அன்புமணி கோஷ்டி ஒரே கூட்டணியில் போட்டியா?
1 பாமக கட்சி, சின்னம் விவகாரத்தில் தற்போதைய ஆவணங்கள்படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. ராமதாஸ் தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர், இதனால் பாமக அன்புமணிக்கே சொந்தம் ஆகிவிட்டதா?
ஆரம்பத்தில் இருந்தே பாமக அன்புமணிக்கு தான் சொந்தமாக உள்ளது. ஏனென்றால் கட்சி விதிகள் படி, கட்சி தலைவரை முடிவெடுக்கும் தகுதி பொதுக்குழுக்கு மட்டுமே உள்ளது. அப்படி பொது குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்புமணி, அவரை நீக்க வேண்டும் என்றாலும் அதற்கு அதிகாரம் பொதுக்குழுக்கு தான் உள்ளது. இதற்கு மாறாக ராமதாஸ் ஒரு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை அழைத்து நான் தான் தலைவர் என்றார். இது நடைமுறைக்கு சரியில்லாத ஒரு விஷயமாக உள்ளது. எனவே கட்சி தலைவர், தலைவருக்கான அதிகாரம் எல்லாம், பாமக இன்றைக்கு முழுமையாக அன்புமணிக்கு பின்னால் வீர நடை போட்டுகொண்டு இருக்கிறது.
2 இந்த தேர்தலில் பாமக என்ற கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் ராமதாஸ் அணி தரப்பில் நிற்பார்களா? அன்புமணி தரப்பில் நிற்பார்களா? வேட்பாளர்களுக்கான ஏ பார்ம், பி பார்மில் யார் கையெழுத்திடுவார்?
இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனென்றால் ஏ பார்ம், பி பார்மில் எப்போதும் ராமதாஸ் கையழுத்து போட்டதில்லை. எப்போதும் கட்சி தலைவர் தான் கையழுத்திடுவார். அந்த வகையில் அன்புமணி தான் தற்போது தலைவராக உள்ளார். எனவே, அவர் பாமக சார்பில் கட்சி வேட்பாளர்களை அறிவிப்பார். அவர் தான் ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடுவார்.
3 என்டிஏ கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துள்ள நிலையில் ராமதாசுக்கும் பிஜேபி அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ராமதாஸ் தரப்பு கூட்டணிக்கு வந்தால் இணைந்து பயணிப்பீர்களா?
இது யூகத்தின் அடிப்படையில் உள்ளது. ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என்றால் தலைவர் அன்புமணி தலைமையில் உயர்நிலை குழு கூடி முடிவு எடுக்கும்.
4 பாமக இரண்டாக உடைந்து உள்ள நிலையில், வன்னியர்களின் ஒட்டு யார் பக்கம் இருக்கும்? வன்னியர் சங்க நிர்வாகிகள் ராமதாசுக்கு பெருமளவு ஆதரவு கொடுப்பதால் அவர்களின் ஒட்டு யாருக்கு கிடைக்கும்?
கட்சி இரண்டாக உடையவில்லை. முழுமையாக தலைவர் அன்புமணி பின்னால் தான் உள்ளது. வன்னியர்கள் வாக்கு அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு தான் வந்து சேரும்.
