மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை

தஞ்சை, பிப்.9: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு வழங்கினர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நிலையத்துக்கும் இரண்டு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.1500 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் குடும்பத்துக்கு போதிய வருவாய் கிடைக்காத நிலையில் வெகுவாக சிரமப்படுவதாகவும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: