சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 4 வயது சிறுமி பலி

மரக்காணம், ஜூன் 20: வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் நாணக்கால் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (38). இவர் தற்போது அனுமந்தை கிராமத்தில் மனைவி ரதிதேவி, மகள் ரித்திகா(4)வுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ரதிதேவிக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் ரித்திகாவை சிகிச்சைக்காக மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் ரித்திகாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

பின்னர் மாலை 5 மணிக்கு குழந்தைக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் அனுமந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த டாக்டர்கள் நீங்கள் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். ரித்திகாவை மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் குழந்தை இறந்து விட்டதாக கூறி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குற்றம் சாட்டினர்.

பின்னர் நேற்று காலை மரக்காணம் காவல் நிலையத்தில் குழந்தை மரணத்தில் சந்தேகம் உள்ளது. மரக்காணம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு இறப்பிற்கான காரணம் தெரியவரும். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்ததால் உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.

The post சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 4 வயது சிறுமி பலி appeared first on Dinakaran.

Related Stories: