வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது

காட்டுமன்னார்கோவில், ஜூன் 20: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் தேவை தட்டுப்பாடு ஏற்படாது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலத்துடன் தண்ணீர் வரத்து காலங்களில் கிட்டத்தட்ட கடல்போல காட்சியளிக்கும். விவசாய பயன்பாட்டிற்காக சோழர்கள் காலத்தில் ஏற்பட்ட ஏரியின் நீர்மட்டம் 47.50 அடி. கொள்ளளவு 1465 மில்லியன் கன அடிகளாகும். சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் அளிக்கிறது. மறைமுகமாக ஏறக்குறைய 1 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் அளிக்கிறது.

ஆண்டுதோறும் மேட்டூரில் திறக்கப்படும் காவிரி நீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து மேலணை வந்து அதிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கீழணைக்கு வரும். கீழணையில் அமைந்திருக்கும் வடவாறு தலை அணை திறக்கப்பட்டு வடவாற்றின் வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும். இது தவிர வீராணம் நீர்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்ட எல்லைகளில் பெய்யும் மழைநீர் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை மற்றும் வெண்ணங்குழி ஓடை ஆகியவைகளின் வழியாகவும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி ஏரிக்கு நீர் வரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் மார்ச் மாதம் தொடங்கி படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதம் ஏரி முற்றிலுமாக வறண்டு போனது. இதனால் சென்னை குடிநீருக்காக அனுப்பப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

சென்னை குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், கல்லணை வந்து கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கீழணைக்கு தண்ணீர் வரத்து வந்தது. கடந்த மாதம் 26ம் தேதி வீராணம் ஏரியை நிரப்பும் விதமாக கீழணையில் உள்ள வடவாறு தலை மதகில் பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறந்து வைத்தனர். தற்போதைய நிலவரத்தின்படி வடவாறு மூலம் ஏரிக்கு நீர் வரத்து 1038 கனஅடி வருகிறது. வீராணம் ஏரியின் முழுகொள்ளளவான 47 அடி இன்று (20ம் தேதி) நிரம்பி விடும். இதிலிருந்து சென்னை குடிநீருக்காக புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. முன்கூட்டியே ஏரி நிரம்பியுள்ளதால் நடப்பு ஆண்டு குறுவை, சம்பா மற்றும் வெற்றிலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

The post வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது appeared first on Dinakaran.

Related Stories: