அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகள் என்ற பெயரில் ஏற்கனவே 2 கட்டமாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். இந்த வாக்குறுதிகள் அனைத்துமே திமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றி வரும் திட்டங்களாக இருக்கின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை ‘காப்பி’ அடித்த அறிவிப்புகளாகவே உள்ளது. இது தற்போது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 3ம் கட்ட வாக்குறுதிகள் மேலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத்தொகை வழங்குவதான அறிவிப்பு மக்களை கேலி பேச வைத்துள்ளது. இது பெண்களிடம் கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதோடு, கருணைத் தொகையை வரி உயர்வின் மூலம் சரி செய்து கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியது பெண்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடியின் இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
‘‘கருணைத் தொகை தரும் அளவுக்கு நாங்க என்ன தரம் தாழ்ந்து போயிருக்கிறோமா? திமுக அரசு எவ்வளவு நாகரிகமாக உரிமைத் தொகை என்று பெயர் வைத்திருக்கிறது? எடப்பாடி கருணைத் தொகை என்று எங்களை கேவலப்படுத்தலாமா?’’ என்று சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து விட்டனர். இந்த டேமேஜை சரி செய்ய என்ன செய்யலாம் என எடப்பாடி தரப்பு இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறது.
மதுரையில் மார்ச் 1ல் நடக்கும் பாஜ, அதிமுக கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்ேபாது, தமிழகம் முழுவதும் பேசு பொருளாக இருக்கும் அளவிற்கு பெரிய அறிவிப்பாக, கவர்ச்சிகரமான அறிவிப்பாக வெளியிட வேண்டுமென அதிமுகவினர் எடப்பாடியிடம் வலியுறுத்தினார்களாம். எடப்பாடி பாஜ நிர்வாகிகள் மூலம் அமித்ஷா மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளாராம்.
இதையடுத்து இலைக்கட்சி நிர்வாகிகளும், பாஜவினரும் இணைந்து மக்களை வளைக்கும் வகையில் உச்சகட்டமாக இலவச அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு விட வேண்டுமென்பது குறித்தும், எந்த மாதிரியான திட்டத்தை அறிவிக்கலாம் என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம். இதுவரை இல்லாத ஒரு திட்டத்தை மதுரை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி நிச்சயம் அறிவிப்பார் என்ற மனநிலையில் தென்மாவட்ட அதிமுகவினர் வரும் வந்து கொண்டிருக்கின்றனர். ‘கவர்ச்சி வாக்குறுதி’யாக எதைத்தரலாம் என்று மூளையைத் தட்டி, யோசனையை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
