கொள்கை முரண்பாடுகள் ஏராளம்; அதிமுக-பாஜ பொருந்தா கூட்டணி: திருமாவளவன் பேட்டி

மீனம்பாக்கம்: வரும் தேர்தலில் திமுக அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்கின்றனர். ஆனால், தனக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்று அதிமுகவை விஜய் குறைத்து மதிப்பிடுகிறார். எனினும், கொள்கை முரண்பாடுகளால் அதிமுக மற்றும் பாஜவுக்கு இடையே இருப்பது பொருந்தா கூட்டணி என்று சென்னை விமானநிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேட்டியளித்தார். சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று பயணிகள் விமானம் மூலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி: திமுக கூட்டணி கட்சியினரை தொகுதி பங்கீடு தொடர்பாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் அழைத்து பேசி வருகின்றனர். எங்களுக்கு அழைப்பு வந்ததும், நாங்கள் சென்று பேசி, தொகுதிகளை முடிவு செய்வோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இடையில்தான் போட்டி என்கின்றனர் மக்கள். ஆனால், தனக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்று விஜய் கூறி, அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு அவமதிக்கிறார். தமிழ்நாட்டில் எப்போதுமே திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையிலான இருதுருவ போட்டி மட்டும்தான். அதேபோல்தான் இத்தேர்தலிலும் நடக்கவிருக்கிறது. மோடி எதிர்ப்பை வெளிப்படையாக பேசியவர் ஜெயலலிதா. இனி எக்காலத்திலும் பாஜவுடன் அதிமுக கூட்டு வைக்காது என்றும் அறிவித்தவர்.

அதிமுகவுக்கும் பாஜவுக்கும் இடையில் அடிப்படையிலேயே கொள்கை முரண்பாடுகளும் வேறுபாடுகளும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் அதிமுக-பாஜ கூட்டணி பல்வேறு முரண்பாடுகளால் பொருந்தா கூட்டணியாக விளங்கி வருகிறது. இதனால்தான் தமிழக கூட்டங்களில் பங்கேற்கும் மோடி, தேர்தலை முன்னிட்டு எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் துணைக்கு அழைக்கிறார். அவர், தங்களின் வாக்குகளை சிதறவிடாமல் சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வருகிறார். தமிழக மக்கள் திமுக கூட்டணியை முழுமையாக நம்புகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் திமுக 2வது முறை ஆட்சியமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: