புதுடெல்லி: இஸ்ரேல் – இந்தியா நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உருவானது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக இரண்டு நாள் அரசுப் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை மாலை 4 மணிவாக்கில் சென்றடைந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை நேரில் வரவேற்ற நிலையில், இந்தப் பயணத்தில் இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றும் முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெறுகிறார். இந்தப் பயணத்தில் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களில் இந்தாண்டு இறுதிக்குள் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், இரு நாடுகளும் இணைந்து புதிய பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பது மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான வரைபடத்தை உருவாக்குவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விடுத்துள்ள கோரிக்கையில், ‘காசா பகுதியில் நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து பிரதமர் தனது உரையில் பேச வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்களுக்காக மனித நேயத்தை ஒருபோதும் அடகு வைக்கக் கூடாது. காசாவில் நடக்கும் கொடூரங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது இந்தியாவின் தார்மீகப் பொறுப்பாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெருமைக்கு அழகல்ல…
இஸ்ரேல் பிரதமருடனான இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், ‘1960ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு காசாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல், 1988ம் ஆண்டு பாலஸ்தீன நாட்டை இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது வரை நீண்டகாலமாக அந்நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே இந்தியா தொடர்ந்து கடைபிடித்து வந்தது. ஆனால், தற்போதைய ஒன்றிய அரசு இந்த நீண்டகால பாரம்பரிய கொள்கையை கைவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணமானது தார்மீக கோழைத்தனம். சொந்த நாட்டிலேயே கடுமையான ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வரும் நெதன்யாகு, காசாவை தரைமட்டமாக்கி வரும் நிலையில் பிரதமர் மோடி அவரை நேரில் சந்திப்பது கண்டிக்கத்தக்கது. நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் இஸ்ரேல் பிரதமரின் செயலை கண்டித்து, அம்மாநில எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடி உரையாற்றும் நாடாளுமன்ற கூட்டத்தைப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகளின் கண்டனத்தை மீறி இஸ்ரேல் பிரதமரை பிரதமர் மோடி கட்டித்தழுவுவது இந்தியாவின் பெருமைக்கு அழகல்ல’ என்றார்.
