ரஜினி படம் தான் உங்களுக்கு பிடிக்குமாமே? கேரள முதல்வர்-மோகன்லால் இன்டர்வியூவ் வைரல்

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் எதையாவது செய்து வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் தலைவர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாஜ, முஸ்லிம் லீக் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொகுதி வாரியாக சென்று இப்போதே மக்களை சந்திக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென முதல்வர் பினராயி விஜயனிடம் பிரபல நடிகர் மோகன்லால் எடுத்த ஒரு பேட்டியின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டு வளாகத்தில் வைத்து இந்த பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் மோகன்லால் கேட்கும் ருசிகரமான சில கேள்விகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

என்னுடைய நண்பர் ஒருவர் மிகவும் ரகசியமாக என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார். உங்களுக்கு ரஜினி படம் தான் ரொம்ப பிடிக்குமாமே என்று மோகன்லால் கேட்கிறார். ரஜினி படம் தான் பிடிக்கும் என்று சொன்னால் மோகன்லால் வருத்தப்படுவாரே என்று நினைத்து, எனக்கு ஆக்ஷன் படங்கள் தான் ரொம்பப் பிடிக்கும் என்று கூறி பினராயி விஜயன் நைசாக அந்த கேள்வியிலிருந்து எஸ்கேப் ஆனார். சினிமாவில் வரும் ஏதாவது ஒரு காட்சியை வாழ்க்கையில் செயல்படுத்தி உள்ளீர்களா, என்னுடைய படத்தில் வரும் ஏதாவது டயலாக்குகள் உங்கள் நினைவில் இருக்கிறதா, முன்பு செய்த ஏதாவது ஒரு தவறான காரியத்தை நினைத்து பின்னர் வருத்தப்பட்டுள்ளீர்களா என்பன உள்பட பல கேள்விகளை பினராயி விஜயனிடம் மோகன்லால் கேட்கிறார். இதன் முழு வீடியோ இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* புதுச்சேரியில் குதிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்
புதுச்சேரி சின்னஞ்சிறிய மாநிலம் என்பதால் நிலத்தின் மதிப்பு நாளுக்கு, நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நகர், புறநகர் பகுதிகள், மாநில எல்லைகளிலும் நிலத்தின் மதிப்பு அதிகளவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ரியல் எஸ்டேட் தொழிலில் நுழைந்தவர்கள் செல்வந்தர்களாக உயர்ந்துவிட்டனர். ரியல் எஸ்டேட் அதிபர்களானவர்கள் அடுத்த கட்டமாக அதிகார ஆசையால், அரசியலுக்குள் நுழைகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் சராசரியாக ஒரு தொகுதிகளில் 30 ஆயிரம் வாக்காளர்கள் தான் உள்ளனர் என்பதும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பெரும் வசதியாக அமைந்து விட்டது.

ஏற்கனவே பல ஆண்டு காலமாக கட்சி தொண்டராக தொடங்கி படிப்படியாக மாநில நிர்வாகியானவர்களுக்கு அரசியல் கட்சிகள் சீட் தருவதில்லை. கடைசி நேரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் உள்ளே புகுந்து பணத்தை காட்டி சீட்டை பெறுகின்றனர். வரும் தேர்தலில் தங்களுக்கு சாதகமான கட்சிகளில் சீட் கேட்டு ரியல் எஸ்டேட் அதிருபர்கள் தற்போது துண்டு போட்டு வருகின்றனர். அதிகளவில் பணம் செலவு செய்வாரர்கள் என்பதால், சீட் வழங்கவும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஒருவேளை சீட் கிடைக்காவிட்டால் சுயேட்சையாக நிற்கவும் தயாராகி வருகின்றனர். இதனால் புதுச்சேரி அரசியல் கட்சியினர் ரியல் எஸ்டேட் அதிபர்களால் கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

* தலைமை தேர்தல் கமிஷனரை தூக்கி சிறையில் போடுங்க… திரிணாமுல் காங்கிரஸ் ஆவேசம்
மேற்குவங்கத்தில் நடந்து வரும் எஸ்ஐஆர் பணிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தனது எக்ஸ் பதிவில், ‘8 மாதங்கள் எடுக்கும் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை மூன்று மாதங்களில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் 1.67 கோடி வாக்காளர்களை நீக்க ஒரு மர்மமான மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜவுக்கு சாதகமான அதிகாரிகள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஞானேஷ் குமார் சமரசம் செய்ததால், 80 லட்சம் செல்லுபடியாகும் வாக்காளர்களுக்கான விசாரணைகள் மூன்றே நாட்களில் முடிக்கப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் மென்பொருள் தர்க்கரீதியான முரண்பாடுகள் என்று குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இதனால் மேற்குவங்கத்தில் 80லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பா.ஜவுக்கு உதவுவதற்காக இந்தியாவின் தேர்தல் செயல்முறையை அழித்ததற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் சிறையில் அடைக்கப்பட வேண்டும்’ என்றார்.

* இளசுகளை கவர ரீல் போட்டி அசாம் பா.ஜ புதுதிட்டம்
அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ மிகப்பிரமாண்ட யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரைக்கு, ஜன் ஆஷிர்வாத் யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை 22 முக்கிய தொகுதிகளில் 400 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை உள்ளடக்கி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாக்காளர்களை சந்திக்கும் வகையில் யாத்திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரீல் ஆன் டெவலப்மென்ட் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இளம் வாக்காளர்களை பாஜ அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தின் வளர்ச்சி முயற்சிகளை எடுத்துக்காட்டும் குறுகிய சமூக ஊடக வீடியோக்களை உருவாக்க அழைக்கிறது. இதற்கிடையே, பா.ஜவில் சீட் மோதல் நடப்பதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரசில் இருந்து பாஜவிற்கு மாறிய பூபன்போராவுக்கு நிச்சயம் சீட் வழங்கப்படும் என்று முதல்வர் ஹிமந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: