தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் ஓய்வறியா போராளி நல்லகண்ணு மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் என்று ஓய்வறியா போராளி நல்லகண்ணு மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: பொதுவாழ்வில் சிறிதும் தன்னலம் கருதாமல் சமூகத்திற்காக மட்டுமே வாழ்ந்த மகத்தான தலைவரும், விடுதலை போராட்ட வீரரும், இந்திய பொது உடைமை இயக்கத்தின் முன்னோடியுமான நல்லகண்ணு மறைவுச் செய்தி செய்தியறிந்து ஆறா துயரமடைந்தேன். தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த போராளி, ஐயா நல்லகண்ணு. எளிமை, நேர்மை, தியாகம் மற்றும் கொள்கை உறுதி ஆகியவற்றால் அனைவராலும் போற்றப்பட்ட பெருந்தகை. அவரது மறைவு பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான நல்லகண்ணு காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். ஜெயலலிதாவின் பேரன்பை பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான நல்லகண்ணு, தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தோழர் நல்லகண்ணுவின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமை தலைவர். பொது வாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர். கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதிமூச்சு வரை சமரசமின்றி வாழ்ந்தவர். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

நயினார் நாகேந்திரன் (பாஜ): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நல்லகண்ணு இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர். அவரது பொது சேவையும், அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தோழர் நல்லகண்ணு தனது பள்ளிப்பருவ காலத்தில் நடைபெற்ற நாட்டின் விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, சிறுவவர்களை அணி திரட்டி, பாரதியின் பாடல்களை தெரு, தெருவாக பாடி, சுதந்திரக் கனலை மூட்டியவர். பள்ளி ஆசிரியர் பலவேசம் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கை வழியை தேர்வு செய்தவர். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளானவர். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் 25 ஆண்டுகள் செயல்பட்டு, அடித்தட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக தொடங்கி கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு உயர்ந்தவர். கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் போன்ற உயர் பொறுப்புகளிலும் செயல்பட்ட பெருமைக்குரியவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், விவசாயிகள் – தொழிலாளர்களின் நலன்களுக்காகவும், சாதிவெறி, மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தமிழகத்தில் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியில் முக்கிய பங்காற்றியவர் நல்லகண்ணு. அவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

கி.வீரமணி (திராவிடர் கழகம்): தோழர் நல்லகண்ணு காலமானார் என்ற செய்தி பெருந்துயரத்திற்குரிய ஒன்றாகும். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டும், கட்சிப் பணிகளை செய்து கொண்டே இருந்தார். விவசாயிகளுக்கான போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிம வளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் என்று வாழ்நாளே போராட்டக்காராக விளங்கிய வாழ்நாள் போராளியாவார். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியுள்ள குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக): அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத் தங்கமாக சுடர் விட்டு ஒளிர்ந்த மாபெரும் தலைவர் நல்லகண்ணு இயற்கை எய்தி விட்டார்கள். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. தமிழ்நாட்டின் வாழ்வாதார அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். நேர்மை எளிமையை அணிகலனாக கொண்டு அனைவருக்கும் முன் உதாரணமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்தவர். அவரது மறைவுக்கு மதிமுக சார்பில் வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மற்றும் சமூகநீதிக்கான போராட்டம் என்றே அடையாளம் காணப்பட்ட நல்லகண்ணு மென்மையானவர் மட்டுமல்ல, அவரின் குரலும் மென்மையானது. ஆனால் அவரின் போர் குணம் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்களுக்காக ஒலிக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத மக்கள் தலைவர். பல சமூக அமைப்புகள் மற்றும் அரசால் வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டது. மனிதநேயம் மிக்கவர். இவர் இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பேரிழப்பு.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): தோழர் நல்லகண்ணு காலமானார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அவர், தமது வாழ்நாளில் எளிமையை கடைபிடித்து, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர். பொதுமக்களின் நலனுக்காக போராடிய அவரது சேவை நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப்போராட்ட வீரருமான தோழர் நல்லகண்ணு காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. பொது வாழ்வில் நேர்மை, எளிமை, தூய்மையை கடைபிடித்தவர். தான் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொள்கையை தனது இறுதி முச்சு வரை பரப்பியவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவு செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன் இருந்த இந்தியாவையும் சுதந்திரம் பெற்ற இந்தியாவையும் பார்த்த ஒரு மாமனிதர். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து போராட்ட களத்திலேயே வாழ்ந்தவர். அவருடைய மறைவு மனித சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்): தோழர் நல்லகண்ணு காலமானார் என்ற செய்தி தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், கடைசி மூச்சுவிடும் வரை உழைக்கும் வர்க்கத்தினருக்காக கட்சி நம்பிக்கையுடன் போராடியவர். அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: